Best Viewed in Mozilla Firefox, Google Chrome

Monsoon failure

24
Jun

குறுவையில் 3.30 லட்சம் டன் நெல் உற்பத்தி பாதிக்கும் அபாயம்: போதிய மழையின்மையால் கவலை

தஞ்சாவூர் : மேட்டூர் அணையில் குறைவான தண்ணீரே இருப்பதால், டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடி யில், 3.30 லட்சம் டன் நெல் உற்பத்தி பாதிக்கும் அபாயம் உருவாகி உள்ளது.
 
1.15 லட்சம் ஹெக்டேரில்...
தமிழக நெல் தேவையில், 52 சதவீதத்தை உற்பத்தி செய்யும் பகுதியாக, டெல்டா மாவட்டங்கள் உள்ளன. மேட்டூர் அணை, ஜூன் 12ல், திறக்கப்பட்டு, தொடர்ந்து போதுமான அளவுக்கு நீர் வரத்து இருந்தால், தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா பகுதியில், குறுவை சாகுபடி, 1.15 லட்சம் ஹெக்டேரில் மேற்கொள்ளப்படும். இல்லையெனில், பம்ப்செட் வசதியுள்ள விவசாயிகள், 65 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி மேற்கொள்வர்.கடந்த, 2012ல், தண்ணீர் பற்றாக்குறையால், மேட்டூர் அணை செப்டம்பரில் திறக்கப் பட்டது. இதனால், 51 ஆயிரம் ஹெக்டேரில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டது. 2013ல், மேட்டூர் அணை, ஆகஸ்ட் 2ல் திறக்கப்பட்டதால், 69,471 ஹெக்டேரில் மட்டுமே, குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

நடப்பாண்டில், மேட்டூர் அணையில், 44.02 அடி நீர் மட்டுமே உள்ளதால், ஜூன், 12ம் தேதி, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே, பம்ப்செட் வசதியுள்ள, 60 ஆயிரம் ஹெக்டேரில் மட்டுமே, குறுவை சாகுபடி துவங்கி உள்ளது. இந்த பிரச்னையால், இந்த ஆண்டும், குறுவை சாகுபடியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வேளாண் வல்லுனர் குழுவை சேர்ந்த, ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் கலைவாணன் கூறியதாவது:
இயல்பை விட, குறைவாகவே தென்மேற்கு பருவமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. பருவமழை பெய்து, அணையில் நீர்மட்டம் உயர்ந்தாலும் கூட, ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் அணை திறந்தால் தான் பயனுள்ளதாக இருக்கும்.
 

ஆற்று பாசனம்
சமீபத்தில் பெய்த மழையை பயன்படுத்தி, பம்ப்செட் வசதிஉள்ள விவசாயிகள் மட்டுமே, நிலத்தை உழும் பணிகளை செய்து வருகின்றனர். மேட்டூரில் தண்ணீர் திறக்கப்படாததால், காவிரி ஆற்று பாசனத்தை மட்டும் நம்பியுள்ள, 55 ஆயிரம் ஹெக்டேரில், குறுவை சாகுபடி நடக்க வாய்ப்பில்லை. இதனால், ௩.௩௦ லட்சம் டன் நெல் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார். 

தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் பொருளாளர் சுவாமிமலை விமல்நாதன் கூறியதாவது:
37.4 டி.எம்.சி., நீர்: திருச்சி முக்கொம்பு முதல், தஞ்சாவூர் அணைக்கரை வரை, காவிரி ஆற்று பகுதியில் தடுப்பணை கிடையாது. மேலும், 36 கிளை ஆறு, வாய்க்கால், பிரிவு வாய்க்கால், ஏரி, குளம் ஆகியவை துார்வராமல் கிடக்கின்றன. கடந்த ஆகஸ்ட்டில், மேட்டூரில் திறந்து விடப்பட்ட, 37.4 டி.எம்.சி., தண்ணீர், வீணாக கடலில் கலந்தது. இந்த நீரை பயன்படுத்தி, 1.50 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்திருக்க முடியும். உபரி நீரை, சேமித்து வைக்க முடியாத பரிதாப நிலையில் உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

 

Syndicate content
Copy rights | Disclaimer | RKMP Policies